Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமகவில் அடுத்த கட்ட நடவடிக்கை? காத்திருப்போம்... காத்திருப்போம்... காலங்கள் வந்துவிடும்...ராகத்தோடு ராமதாஸ் பதில்

திண்டிவனம்: பாமகவில் தந்தை, மகனிடையே மோதல் நீடிக்கும் நிலையில் அன்புமணி தைலாபுரம் தோட்டத்துக்கு வருவதை நிறுத்தினார். கடந்த 10ம்தேதி ராமதாஸ் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் திடீரென தைலாபுரம் வந்த அன்புமணி தாயார் சரஸ்வதியை சந்தித்தார். இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மகள் நிச்சயதார்த்த விழாவுக்காக கடந்த 13ம் தேதி ராமதாஸ் மனைவியுடன் சென்னை சென்றார்.

அப்போது பனையூர் இல்லத்துக்கு சென்று அன்புமணியை, அவரது தாய் சரஸ்வதி அம்மாள் சந்தித்தார். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆசி வழங்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நேற்று சென்னையிலிருந்து தைலாபுரம் திரும்பிய ராமதாசிடம் ஜி.கே.மணியும், அன்புமணியும் ஒன்றாக சந்தித்து பேசியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவர்கள் என்ன பேசினார்கள், ஏது பேசினார்கள் என்பது தெரியவில்லை. நான் அவரிடம் கேட்டுவிட்டு நாளை பதில் கூறட்டுமா? என்றார்.

மேலும், அன்புமணி வீட்டுக்கு அவரது தாய் சென்று சந்தித்தது குறித்த கேள்விக்கு, அம்மா, பிள்ளையை பார்ப்பதும், பிள்ளை அம்மாவை பார்ப்பதும் சகஜம்தான், என்றார். பாமகவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உங்களுடைய கருத்துக்காக நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றதற்கு, காத்திருப்போம்... காத்திருப்போம்... காலங்கள் வந்திடும்... என ராகத்துடன் பாடி பதில் கூறினார். இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ளன மோதல் போக்கு எப்படி போய்க்கிட்டு இருக்கு என்ற கேள்விக்கு, தேர்தலும் வரும் அதனையும் சந்திப்போம் என்றார்.

* ஒட்டுகேட்பு கருவி : சைபர் கிரைமில் புகார்

ராமதாசின் தைலாபுரம் இல்லத்தில் அவரது ஷோபா அருகில் வைக்கப்பட்டிருந்த ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தனியார் துப்பறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு சென்று சைபர் பிரிவில் ஏடிஎஸ்பி. தினகரனிடம், ஒரு புகார் மனுவை அளித்தனர்.

அதில், கடந்த 9ம்தேதி மாலை 6.30 மணிக்கு வீட்டை சுத்தம் செய்யும்போது ராமதாஸ் உட்காரும் ஷோபாவுக்கு அருகே ஒட்டு கேட்பு கருவி இருந்ததை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த கருவியை வைத்தது யார், எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளனர்.

ஏடிஎஸ்பி தினகரன், அந்த கருவி, சிம்கார்டுகளை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்டதற்கு நீங்கள் தோட்டத்துக்கு விசாரணைக்கு வரும்போது ஒப்படைக்கிறோம். அந்த சிம்கார்டு லண்டனில் வாங்கியதாக தெரிகிறது என்று தெரிவித்தனர். இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் ராமதாஸ் வீட்டில் இன்று விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.