திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் கடந்த 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி மகளிர் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ராமதாஸ் செய்து வருகிறார். இந்த மகளிர் மாநாட்டுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டீசில் அன்புமணியின் பெயர் மற்றும் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழு கூட்டத்திலும் அன்புமணியின் பெயரோ, புகைப்படமோ இடம்பெற வில்லை. இதேபோல் ராமதாஸ் நடத்தும் பாமக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அன்புமணியின் பெயர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு குறித்து பேச ராமதாசை சந்திக்க தயார்: திலகபாமா
சிவகாசியில் அன்புமணி அணியை சேர்ந்த திலகபாமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ராமதாஸ், அன்புமணி பிரச்னை விரைவில் சரியாகி விடும். இணைப்பு குறித்து எந்த நிமிடத்திலும் ராமதாசை சந்தித்து பேச தயாராக உள்ளோம்’ என்றார்.
ஒரே நேரத்தில் 200 நிர்வாகிகள் மாற்றம்
இதுவரை அன்புமணி ஆதரவாளர்களான 81 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார். நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.