ராமதாசுக்கு எதிராக செயல்பட்ட அன்புமணி ஆதரவாளர்களான 3 பாமக எம்எல்ஏக்கள், வக்கீல் பாலு கட்சியில் இருந்து அதிரடி சஸ்பெண்ட்: யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என உத்தரவு
திண்டிவனம்: ராமதாசுக்கு எதிராக செயல்பட்ட அன்புமணி ஆதரவாளர்களான 3 பாமக எம்எல்ஏக்கள், வக்கீல் பாலு கட்சியில் இருந்து அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என பாமக தலைமை உத்தரவிட்டுள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக தொடர் நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர். அன்புமணி ஆதரவாளர்களான பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர்கள் 81 பேர், தலைவர்கள் 62 பேர் உள்பட மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து உள்ளார். இதேபோல், அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக நீதி பேரவை தலைவராக இருந்த பாலுவையும் அப்பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார்.இவர்களில் பலர் நிர்வாகிகளாக தொடர்வதாக அன்புமணியும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளை இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் அறிவித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ராமதாசை விமர்சித்த அன்புமணியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்புமணி அவரை கட்சியில் இருந்து நீக்கினார். மேலும் சட்டமன்ற கொறடா பதவியில் இருந்து அவரை மாற்றுவதற்கு பாமகவில் தனக்கு ஆதரவாக உள்ள 3 எம்எல்ஏக்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் மூலம் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து, 3 எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் பதவியை ராமதாஸ் பறித்தார்.
இதையடுத்து, பாமகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயரை ராமதாஸ் நீக்கினார். அதைதொடர்ந்து மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் ராமதாஸ் சுற்றப்பயணம் மேற்கொண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டினார். மேலும் இவரது பயணத்தில் அதிகமான பாமகவினர் திரண்டதால் உற்சாகமடைந்துள்ளார். பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் மாநாட்டை அன்புமணி துணை இல்லாமல் தன் தலைமையில நடத்தி காட்டி கட்சி தன் பக்கம் தான் உள்ளது என நிரூபிக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதனால் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியை மாநாட்டு தலைவராக அறிவித்தார். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிவிட்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன் பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் வன்னியர் சங்கத்தின் 46வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இடஒதுக்கீடு கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அன்புமணி அறிவித்தார். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கலந்து கொள்ளப்போவதில்லை என வெளிப்படையாக அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாசால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அன்புமணி ஆதரவாளர்களான பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள், ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து பாமக எம்எல்ஏக்கள் 3 பேரையும், வழக்கறிஞர் பாலுவையும் நீக்கி பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி. சமீபகாலமாக பாமகவின் 3 எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்து வரும் செயல், சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணியால் கட்சியின் தலைமைக்கு கொண்டு வரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாகக்குழு அதனை, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த 3 எம்எல்ஏக்கள் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோரின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து எம்எல்ஏ இரா.அருளை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயல் ஒழுங்கீனமான செயல் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனால் அவர்கள் மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், நால்வரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள்.முழுமையான ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்காக அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டியிருப்பதால் கட்சி தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். விசாரணை குழு, அவர்கள் நால்வரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரத்தையும் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பாமகவுக்கு மொத்தம் 5 எம்எல்ஏக்கள், இதில் கவுவர தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச் செயலாளர் அருள் ஆகியோர் ராமதாஸ் ஆதரவாளர்கள். மற்ற 3 எம்எல்ஏக்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணி ஆதரவாளர்கள். அவர்களை ராமதாஸ் அதிரடியாக பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்திருப்பது பாமக நிர்வாகிகள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.