நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அனுமதி கொடுத்துவிட்டார்கள் நான்தான் பாமக தலைவர் மாம்பழம் எங்களுக்குதான்: அன்புமணி திட்டவட்டம்
திண்டிவனம்: நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான்தான் பாமக தலைவர். மாம்பழ சின்னம் எங்களுக்குதான் என்று அன்புமணி தெரிவித்தார். திண்டிவனத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம், விதிகளின்படி பாமக தலைவராக 2026 ஆகஸ்ட் மாதம் வரை என்னை நீட்டித்திருக்கிறது.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள். தேர்தல் ஆணையம் பிறப்பித்த அனுமதியை, எனக்கு கொடுத்த அந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்றும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்குள் பிரச்னை இருந்தால் இதனை சிவில் நீதிமன்றத்தில் வாதம் செய்யலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. பலமுறை முயற்சி செய்தும், என்னை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்படி அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை நான் தலைவராக இருப்பேன், தொடர்வேன்.
அதேபோன்று மாம்பழ சின்னமும் எங்களுக்குதான் இருக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் இதே தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமென தீர்ப்பு கொடுத்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதி, அங்கீகாரத்தை பற்றி எந்த கருத்தும் நீதிமன்றம் சொல்லவில்லை.
அதனால் எந்த குழப்பமும் கிடையாது. தொடர்ந்து பாமக தலைவராக நான் நீடிப்பேன். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். பாமகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது, இன்னும் கூடுதலாக வாக்குகள் வரும்.இவ்வாறு அவர் கூறினார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த சர்ச்சையும் வரக்கூடாது. நீதிமன்றம் கூறுவதை கேட்க வேண்டும்’ என்றார்.
* ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும்
கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு அன்புமணி கூறுகையில், ‘ஆட்சியில் பங்கு என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யலாம். இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு மிகப்பெரிய பலமான மெகா கூட்டணி தமிழ்நாட்டில் அமையும். அந்த கூட்டணியில் பாமக இடம்பெறும். எங்கள் கூட்டணிதான் நிச்சயம் வெற்றி பெறும். கூட்டணி அமைந்தால் எங்கள் அணி வேகமாக முன்னேறி வெற்றி பெறும்’ என்றார்.
* குலதெய்வ கோயிலில் கண்ணீர் மல்க வழிபாடு
அன்புமணி, ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது எம்பி நிதியிலிருந்து அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் நியாயவிலை கடை அமைக்க ரூ.13.5 லட்சம் நிதி அளித்திருந்தார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த அவர் மரக்காணத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கீழ்சிவிரியில் நியாயவிலை கடையை திறந்து வைத்தார். பின்னர் அருகில் நல்லாவூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான அய்யனார் கோயிலில் தனது மனைவி சௌமியாவுடன் கண்ணீர்விட்டு சாமி தரிசனம் செய்தார்.
* அன்புமணிக்கு எதிரான சிபிஐ வழக்கில் விரைவில் தீர்ப்பு
போலி ஆவணம் கொடுத்து பாமகவை அன்புமணி அபகரித்து விட்டதாக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்திருந்த நிலையில் அன்புமணி குலதெய்வம் கோயிலுக்கு வந்தது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அன்புமணி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, சட்ட விரோதமாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய வழக்கை சிபிஐ விசாரணை முடிந்து தீர்ப்பு எப்போதும் வேண்டுமெனாலும் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு பாதகமாக வரும் என்ற அச்சத்தில் அன்புமணி உள்ளதால், குலதெய்வ கோயிலுக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

