Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தைலாபுரத்தில் நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை: எம்எல்ஏ அருளுக்கு புதிய பதவி: வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் இருவர் நீக்கம்

திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் நேற்று முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில் எம்எல்ஏ அருளுக்கு புதிய பதவி அளித்தும், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் இருவரை நீக்கியும் உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி உள்ள நிலையில், ‘பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாம்பழம் சின்னம் தங்களுக்குகே சொந்தம்’ என்று அன்புமணியின் ஆதரவு செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த அருள் எம்எல்ஏ, ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு தெரியாமலேயே முகவரியை திருட்டுத்தனமாக மாற்றி உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் எந்த இடத்திலும் அன்புமணி கட்சி தலைவர் என்று குறிப்பிடவில்லை. இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், அடுத்தக்கட்ட செயல்பாடுகள், கூட்டணி நிலைப்பாடு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த முடிவு செய்த ராமதாஸ் நாளை (23ம் தேதி) தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார். தொடர்ந்து, 24ம் தேதி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டமும் நடக்கிறது.

இக்கூட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளான கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் சங்க கோபு, பரந்தாமன் ஆகியோருடன் ராமதாஸ் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து பாமக இணை பொதுச்செயலாளராக உள்ள சேலம் அருள் எம்எல்ஏவுக்கு, பாமகவின் தலைமை செய்தி தொடர்பாளர் பதவியும் கூடுதலாக வழங்கி ராமதாஸ் உத்தரவிட்டார்.

இதேபோல், வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வன்னியர் சங்க மாநில செயலாளராக பதவி வகித்த வைத்தி, முன்னாள் எம்எல்ஏ கார்த்தி ஆகியோர் தொடர்ந்து ராமதாசுக்கு எதிராகவும், வன்னியர் சங்கத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் ராமதாசின் ஒப்புதலோடு இருவரையும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

வன்னியர் சங்க நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று கூறி உள்ளார். பாமகவில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களால் பரபரப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேலும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.

* அன்புமணியை அங்கீகரிக்கவில்லை: கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு; எம்எல்ஏ அருள் பேட்டி

தைலாபுரத்தில் ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தி தொடர்பாளர் அருள் எம்எல்ஏ கூறியதாவது: பாமகவின் செயல்பாடுகள், தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டணி அமைக்க ராமதாசுக்கு நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழுவால் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியை ராமதாஸ் முடிவு செய்வார். பாமக தொண்டர்கள் குதித்து கொண்டாடும் கூட்டணியை ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்.

கூட்டணி கட்சி தலைவர் விரைவில் தைலாபுரத்தில் ராமதாசை சந்திப்பார்கள். அன்புமணி தரப்பில் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தரக்கோரிய கடிதத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. பீகார் தேர்தலில் பாமக போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணையத்திடம் பொய் கூறியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியை தவிர வேறு மாநிலத்தில் கட்சி இல்லை. முகவரி மாற்றம் பொய்யானது என தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது, அன்புமணி நீக்கப்பட்டது குறித்த தகவலை தேர்தல் ஆனையத்திடம் கூறியுள்ளோம்.

அன்புமணி தரப்பு கோயபல்ஸ் பிரசாரம் செய்து வருகின்றனர். ராமதாஸ் இல்லாமல் பாமக ஓட்டை பெற முடியாது. பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் எங்கும் கூறவில்லை. அடுத்த வாரம் மீண்டும் டெல்லி செல்லவுள்ளேன். கூட்டணி கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் தைலாபுரம் வந்து சந்திப்பதுதான் வழக்கம். மருத்துவர் ராமதாஸ் கை காட்டுபவரே தமிழகத்தின் அடுத்த முதல்வராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.