Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை; அன்புமணி மீதான நடவடிக்கை என்ன..? சீலிட்ட கவரில் ராமதாசிடம் அறிக்கை

திண்டிவனம்: தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி ஆலோசனை நடத்திய நிலையில், அன்புமணி மீதான நடவடிக்கை குறித்த தங்களது ஒருமித்த முடிவுக்கான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நிறுவனர் ராமதாசிடம் வழங்கியது. இதன்மீது நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் இறுதி முடிவெடுத்து அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே 7 மாதங்களை கடந்த நிலையிலும் அதிகார மோதல் நீடித்து வருகிறது. இருவரும் பாமக போட்டி பொதுக்குழுவை நடத்தி முடித்த நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு 16 குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இதற்கு ஆக.31ம்தேதிக்குள் விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது. ஆனால் அன்புமணி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த பரபரப்பான சூழலில் தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று கூடியது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், வந்தவாசி முன்னாள் எம்பி துரை, தர்மபுரி நெடுங்கீரன், தலைமை அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சேலம் சதாசிவம், மாநில மகளிர் அணி செயலாளர் தஞ்சாவூர் பானுமதி, ஆடுதுறை ம.க.ஸ்டாலின், திருமலை, குமாரசாமி, பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 12.30 வரை 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தின்போது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு, ஒருமித்த கருத்தாக அறிக்கை தயாரித்து அதை சீலிடப்பட்ட கவரில் நிறுவனர் ராமதாசிடம் வழங்கியது. இதன்மீது அடுத்தடுத்து நடைபெறும் கூட்டங்களில் ஆலோசித்தபின், நாளை அல்லது நாளை மறுநாள் (வியாழன்) செய்தியாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி மீதான நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என தெரிகிறது.

இதனிடைய பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து வெளியே வந்த குழு உறுப்பினர் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் கூறும்போது, அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாங்கள் அளித்துள்ள கருத்து குறித்து நாளை (இன்று) நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மறுநாள் நடக்கும் நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவை ராமதாஸ் தான் எடுப்பார். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதும், மாற்றியமைப்பதும் அவரது கையில்தான் இருக்கிறது. பாமகவில் 2026ல் ராமதாஸ் அமைக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி, இதில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்தார்.

ராமதாஸ் வீடு அருகிலிருந்து அன்புமணி நடைபயணம்

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடந்த நிலையில், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் திண்டிவனத்தில் ராமதாஸ் வீடு அமைந்துள்ள பகுதியிலிருந்து அன்புமணி நேற்று மாலை நடைபயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து வண்டிமேடு திடல் மற்றும் செஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்றது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.