Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போலி ஆவணங்கள் கொடுத்து பாமகவை அபகரிக்க முயற்சி அன்புமணி மீது டெல்லி போலீசில் ராமதாஸ் புகார்: ஊழல் வழக்குடன் சேர்த்து சிபிஐ விசாரிக்கவும் வலியுறுத்தல்

திண்டிவனம்: தேர்தல் ஆணையத்தை அன்புமணி போலி ஆவணங்கள் மூலம் பாமகவை அபகரிக்க முயல்வதாக டெல்லி போலீசில் ராமதாஸ் புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே அன்புமணி மீது உள்ள ஊழல் புகாரையும் சேர்ந்து இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை நீதிபதி மினி புஷ்கர்னா விசாரித்தார். அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘கட்சியில் இதே குழப்ப நிலை நீடித்தால் பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்க நேரிடும்’ என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது; இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி மீது டெல்லி காவல் துணை ஆணையரிடம் ராமதாஸ் சார்பில் அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘ராமதாஸ் ஆகிய நான், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தற்போதைய தலைவராக, 30.5.2025 முதல் 3 ஆண்டு காலத்துக்கு தகுதிவாய்ந்த அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணி, 4.12.2023 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு போலி ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், பதிவு எண் (56/73/2023) ஆவணத்தின் படி 31.8.2023 அன்று பாமகவின் தலைவராக பதவி ஏற்று கொண்டதாக போலி ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்துள்ளார். அந்த ஆவணங்கள் பாமகவின் எந்தவொரு தகுதிவாய்ந்த அமைப்பினாலும் தேர்தல் அல்லது தேர்வு இல்லாமல், அன்புமணியால் சொந்தமாக உருவாக்கப்பட்டது.

அதேபோல், எங்கள் கட்சி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ முகவரியையும் அன்புமணி மோசடியான ஆவணத்தால் திருட்டுத்தனமாக மாற்றியுள்ளார். ஆகஸ்ட் 31, 2023 என்ற தேதியிட்ட ஆவணத்தை உருவாக்கி, (நிறுவனர்) மற்றும் தற்போதைய கட்சியின் தலைவராகிய என்னிடமிருந்து பாமகவை பறிக்கும் முயற்சி, இந்த செயல் ஜனநாயக அரசியலுக்கு எதிரானது.எனவே, அன்புமணிக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்படுகிறது. ஏனெனில் மேற்கூறிய ஆவணங்கள் அனைத்தும் (4.12.2025) இந்திய தேர்தல் ஆணையத்தால் நீதிமன்றத்தில் நீதிபதி மினி புஸ்கர்ணா முன் சமர்ப்பித்து விசாரணை நடத்தப்பட்டது.

எனவே, அன்புமணி மீதும் அவரது தலைமையிலான குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகுந்த விசாரணை நடத்தி, இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி ஊழல் தொடர்பான சி.பி.ஐ வழக்குகளை எதிர்கொள்வதால், உண்மையான குற்றம் சாட்டப்பட்ட நபரை தண்டிப்பதற்காகவும், நீதி வழங்குவதற்காகவும் இந்த கட்சி விவகாரத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த புகாரை உங்கள் அலுவலகத்துக்கு நேரில் ஒப்படைக்க எங்கள் கவுரவ தலைவர் ஜி.கே.மணிக்கு நான் அதிகாரம் அளிக்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரில் ராமதாஸ் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதத்தின் நகல்கள் சி.பி.ஐ இயக்குநர் மற்றும் டெல்லி காவல் ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அன்புமணி ஒன்றிய அமைச்சராக இருந்த போது, சட்டவிரோதமாக மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கிய வழக்கில் விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வழங்கலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த ஊழல் வழக்குடன் சேர்த்து அன்புமணி போலி ஆவணங்கள் மூலம் கட்சியை அபகரிக்க முயற்சிக்கும் புகாரையும் விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் மனு கொடுத்து உள்ளது, பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கா? ராமதாஸ் பரபரப்பு பேட்டி

தைலாபுரத்தில் நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘அம்பேத்கர் வகுத்து தந்த சமநீதி, சமூக நீதி கொள்கையை உயர்த்தி பிடிப்போம். அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்றவில்லை என்றால் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள், பிற சமூக மக்கள் கல்வியில் மற்றும் வேலையில் சேர்ந்திருக்க முடியாது. ஆடு மாடுகளைதான் மேய்த்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் இன்று உலகளவில் போற்றப்படுவராக அண்ணல் அம்பேத்கர் திகழ்ந்து வருகிறார், அவர் விட்டு சென்று கொள்கையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம், வெற்றிபெறுவோம் என்றார். இதைத் தொடர்ந்து பாமகவை திரும்பப் பெற உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு, நாளை (இன்று முடிவு) தெரிவிப்பதாக பதிலளித்தார்.