டெல்லி: இன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
*பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்;
"டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். இளைஞர்களை தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை... வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
*காங்கிரஸ் தனது எக்ஸ் பதிவில்;
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.
இந்தியாவின் அன்பான 'ஏவுகணை மனிதர்' தனது தொலைநோக்கு பார்வை, பணிவு மற்றும் அறிவியல் மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு மூலம் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்தார்.
புதுமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் அவரது மரபு என்றென்றும் வாழ்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்;
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ‘ஏவுகணை நாயகர்’ என்கிற பெருமை பெற்ற டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அறிவியல், கல்வி, தேச முன்னேற்றம், எதிர்காலக் கனவு போன்ற பல துறைகளில் பள்ளி மாணவர்களிடையே பேசியும் எழுதியும், அவர்களிடம் சிந்தனையை விதைத்த மாபெரும் கனவு நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்!
எப்போதும் மாணவர்களையும் இளைஞர்களையும் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி, அவர்களிடம் கனவுகளை விதைத்து வந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்!
இன்றைய தினத்தில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்ட ‘வல்லரசு இந்தியா’ உருவாக நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
*கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
படகுவிடும் குடும்பம்
உங்களுடையது
நீங்களோ
ஏவுகணை விடுத்தீர்கள்
வடலூர் வள்ளலாரும்
நீங்களும் ஏற்றிய
அக்கினி மட்டும்
அணைவதே இல்லை
எங்களுக்கு வாய்த்த
இஸ்லாமிய காந்தி நீங்கள்
ஜனாதிபதி மாளிகையில்
கைப்பெட்டியோடு நுழைந்து
கைப்பெட்டியோடு வெளிவந்த
கர்ம வீரரே!
மீண்டு வரும்போது
அந்தப் பெட்டிக்குள்
ஒன்றும் இல்லை என்பதில்
உண்மை இல்லை
130 கோடி
இந்திய இதயங்களை
அந்தச் சின்னப் பெட்டிக்குள்
சிறைகொண்டு வந்தீரே
அப்துல் கலாம் அய்யா
அழியாது உமது புகழ்;
அது இந்திய வானத்தில்
எழுதப் பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.