பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க வழிகாட்டு நெறிமுறை: தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டது
சென்னை: நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2025-26) பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல், கடந்தாண்டு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களின் விவரங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான தரவுகள் எமிஸ் வலைதளத்தில் இருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. எனவே, அதன் விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும்.
அதன்படி பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறையின் இணையதளத்தில் சென்று (www.dge.tn.gov.in) பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் மாணவரின் பெயர் (தமிழ், ஆங்கிலம்), புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதன் விவரங்களை 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து அக்டோபர் 3ம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
அதேநேரம் பெயர் மாற்றம் செய்த மாணவர்கள் அரசிதழ் நகலை இணைத்து அனுப்பலாம். தலைமையாசிரியர்கள் பெயர்ப் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை சரியாக விவரித்து அனுப்ப வேண்டும். அதேபோல், பட்டியலில் இருந்து ஏதேனும் மாணவரின் பெயரை நீக்க வேண்டுமெனில் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும். எந்த காரணம் கொண்டும் முன் அனுமதியின்றி நீண்டகாலம் விடுப்பில் உள்ள அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறாத மாணவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது. இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.