திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரைச் சேர்ந்த அனீஷ் ஜார்ஜ் என்பவர் எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பியூனாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அனீஷ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்ஐஆர் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். அனீஷ் ஜார்ஜின் அக்காள் கணவரான ஷைஜு கூறியது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அனீஷ் ஜார்ஜுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க முடியுமா என்ற பதற்றத்தில் அவர் இருந்தார். மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூட அவருக்கு நேரம் கிடைக்க வில்லை. இதற்கிடையே பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர் என்றார்.
இதற்கிடையே எஸ்ஐஆர் பணிகள் காரணமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதாக கூறி கேரளா முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஎல்ஓக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகம் முன்பும், மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையே முஸ்லிம் லீக் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் சூழலில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கோரி உள்ளது.


