ப்ளீஸ் எங்க கூட வாங்க... கூட்டணிக்கு விஜய் வராவிட்டால் அதிமுக ஓட்டு சதவீதம் குறையும்: ராஜேந்திர பாலாஜி பரபரப்பு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விஜய் ஒரு ஸ்டார் நடிகர். அவருக்கென ஒரு மாஸ் இருப்பதை மறுக்க முடியாது. அவரது நடவடிக்கைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதெல்லாம் ஓட்டாக மாற வேண்டும் என்றால் பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை. அந்த பயிற்சியாளர்களாக அதிமுக நிர்வாகிகள் இருப்பார்கள்.
விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவருக்கு நல்லது. வரவில்லை என்றாலும் அதிமுகவிற்கு எந்த கெடுதலும் கிடையாது. விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால் அதிமுக கூட்டணிக்கு ஓட்டு சதவீதம் குறையும். ஆனால் வெற்றியின் விளிம்பிலிருந்து அதிமுக இறங்கி வராது. விஜய் கூட்டணிக்கு வந்தால் 220 தொகுதிகளில் வெற்றி பெறும். விஜய் வரவில்லை என்றால் 180 இடத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் அவரது எதிர்காலத்திற்கு நல்லது. விஜய் கூட்டணிக்கு வருவதும் தனித்துப் போட்டியிடுவதும் அவரது முடிவு. ஆனால் அதிமுக, பாஜ, விஜய் அனைவரும் கூட்டணியில் இணைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு விஜய் வருவது என்பது அவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பாகவும், அவரது எதிர்கால அரசியலுக்கு பாதுகாப்பாகவும் அமையும். விஜய்யை நான் அழைக்கவில்லை, வந்தால் வரவேற்போம். இவ்வாறு தெரிவித்தார்.
