வீடியோ கேம் ஆடினாலும் ரூ. 1 லட்சம் பரிசு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளை ஊக்குவிக்க ரூ.4.54 கோடி ஒதுக்கீடு: சென்னையில் உலகத்தரத்துடன் போட்டி நடத்த திட்டம்
சென்னை: சென்னையில் இந்தியாவின் பிரமாண்ட இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக அரசு இணைந்து ‘சென்னை இ-ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப்’ என்ற இந்தியாவின் சர்வதேச அளவிலான இ-ஸ்போர்ட்ஸ் (வீடியோ கேம்) போட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த சர்வதேசப் போட்டியை நடத்துவதற்காக ரூ. 4.54 கோடி ஒதுக்கியுள்ளார். இந்தப் பிரம்மாண்ட சாம்பியன்ஷிப், நவம்பரில், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் உலகெங்கிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட சர்வதேச அணிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகள் சென்னையை தெற்காசியாவின் வளர்ந்து வரும் இ-ஸ்போர்ட்ஸ் தலைநகரமாக நிலைநிறுத்தும். தற்போது நடந்து வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-இல், இ-ஸ்போர்ட்ஸ் (வீடியோ கேம் போட்டிகள்) ஒரு முழு அளவிலான போட்டிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
இ-ஸ்போர்ட்ஸ் பிரிவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசை வெல்ல முடியும்.