அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காய்கறி, பூ மற்றும் பழ மார்க்கெட்டுகளுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நகரமுடியாமல் அப்படியே நின்றது. மக்கள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்து கொடுத்தனர். ‘’பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்பு, மெட்ரோ ரயில் பயணிகள் ஆகியவற்றின் காரணமாக இந்த போக்குவரத்து பாதிப்பு தினமும் ஏற்படுகிறது’ என்று மக்கள் கூறுகின்றனர்.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட் அருகே தினமும் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வருகின்ற வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மேலும் மெட்ரோ பணிகள் நடைபெறுவதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் முன்பே போக்குவரத்து பிரச்னையில் தீர்வுகாணவேண்டும்’ என்றார்.