Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழநி-கொடைக்கானல் சாலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: வனத்துறை கண்காணிக்க கோரிக்கை

பழநி: பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி வனச்சரகம். இந்த வனச்சரகத்தில் யானை, வரிப்புலி, சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் அதிகளவில் உள்ளன. பழநி வனச்சரகத்தின் வழியாக கோடை வாஸ்தலமான கொடைக்கானலுக்கு செல்லும் மலைச்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் பசுமை நிறைந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. இது வாகனங்களில் பயணிப்போருக்கு ரம்மியான சூழலை ஏற்படுத்தும்.

இந்நிலையில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது, உணவு கழிவுகளை வீசுவது, பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வனப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘சுற்றுலா பயணிகள் தூக்கி எறியும் பாட்டில்கள் உடைவதால், அதனை மிதிக்கும் வனவிலங்குகள் காயமடைகின்றன. சுற்றுலா பயணிகள் வீசிஎறியும் உணவுகள் உண்ணும்போது வனவிலங்குகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன. சுற்றுலா பயணிகள் வீசி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் மண்ணின் தரம் மாசடைகிறது. புகை பிடித்து விட்டு வீசும்போது, சருகுகளில் தீப்பற்றி, வனத்தீ உண்டாகிறது.

எனவே, சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் செல்லும்போது மது அருந்தக்கூடாது. புகை பிடிக்கக் கூடாது. விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. தண்ணீர் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாதென அறிவுறுத்தி வருகிறோம். சோதனையும் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், சுற்றுலா பயணிகளிடமும் சுய விழிப்புணர்வு மற்றும் அக்கறை இருக்க வேண்டும்’’ என்றனர்.