பிளாஸ்டிக் பொருட்கள் தடை ஆணைக்கு பிறகு 17.23 லட்சம் சோதனைகள் நடத்தி ரூ.21.47 கோடி அபராதம் விதிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை
சென்னை: ஊட்டியில் கடந்த மே மாதம் நடந்த நாய் கண்காட்சியில் பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2019ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23,567 சோதனைகள் நடத்தப்பட்டு, 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, நெல்லை, குமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில், 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 261 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 176 தொழிற்சாலைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 13 மாவட்டங்களில் இயங்கி வந்தன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எப்படி அப்புறப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், மூடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொழிற்சாலைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.