ஈரோடு: ஈரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 1,140 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், மாநகாரட்சி அதிகாரிகள் தினசரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கந்தசாமி வீதியில், குரு ராஜேந்திரா பிளாஸ்டிக் என்ற கடையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சுகாதார ஆய்வாளர் பூபாலன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், அந்த கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கடையின் குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குடோன் மற்றும் கடையில் இருந்து 1,140 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் ராகுல் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கு ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.