Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாடு செல்லும் அண்ணாமலை, கட்சியை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: மக்களவை தேர்தலில் வேலை செய்யாத பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை

சென்னை: மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து பாஜகவில் தொகுதி வாரியான ஆய்வு நாளையுடன் முடிவடைகிறது. ஒழுங்காக வேலை செய்யாதவர்கள் பதவிகளை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அண்ணாமலை வெளிநாடு செல்வதால் கட்சியை நிர்வகிக்க தனி கமிட்டி அமைக்க மேலிடம் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டனர். மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை, ராம.சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொன் பாலகணபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் களம் இறங்கினர். ஆனால் பாஜகவால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. இது பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கூட்டணி பலமின்மை, தேர்தலின்போது சில தொகுதிகளில் தேர்தல் செலவினத்தில் நடந்த முறைகேடுகள் போன்ற சில முக்கிய காரணங்கள் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டது. தோல்விக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களிடம் தோல்விக்கான காரணம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. தென் சென்னையில் கனகசபாபதி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன என்று அதிரடியாக புகார்கள் கூறப்பட்டது. கருத்து ேகட்பு கூட்டத்தில் சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே மோதல், கைகலப்பு வரை மோதல் சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது.

தொடர்ந்து தொகுதி வாரியாக தோல்விக்கான காரணம் என்ன, நிர்வாகிகள் செயல்பாடு பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து குழுவினர் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள். தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயல் வாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலும் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் புகாருக்கு ஆளான நிர்வாகிகள் பதவிகளை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செயற்குழு முடிந்ததும் புகார்களுக்கு ஆளானவர்கள் பதவிகளில் இருந்து நீக்கும் பணி தொடங்கும் என்று பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தநிலையில் அண்ணாமலை 6 மாதம் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சென்று படிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இல்லாத இந்த 6 மாத கால இடைவெளியில் கட்சியை நடத்த ஒரு கமிட்டி அமைக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவில் மூத்த தலைவர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அண்ணாமலை திரும்பி வரும்போது அவருக்கு தேசிய அளவில் பொறுப்புக்களை கொடுக்கவும், தமிழகத்திற்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வெளிநாடு செல்லும் நேரத்தில் அவரது பதவி பறிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதால், தமிழக பாஜகவில் பரபரப்பு எழுந்துள்ளது. புதிய மாநில தலைவர் பதவியைப் பிடிக்க மூத்த தலைவர்கள் கடுமையாக மோதி வருகின்றனர்.