ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்? காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்: பாமக செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்? என்பது குறித்து காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு வலியுறுத்தியுள்ளார். பாமக செய்தித் தொடர்பாளர் கே. பாலு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை விசாரணை தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தைலாபுரம் இல்லத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் நிலவுவதை சகித்துக் கொள்ள முடியாது. அங்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அங்கு ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதை காவல்துறை வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணையைத் தீவிரப்படுத்தி, ஒட்டுக்கேட்புக் கருவியை வைத்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.