செப்டம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது 2025 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா. இந்நாளில் ஒன்பது நாட்களும் அம்மனின் ஒன்பது வடிவங்களும் வழிபடப் படுகின்றன. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிறம் என ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிறம் அம்மனுக்கு மட்டுமல்ல நம் வாழ்க்கைக்கும் ஏராளமான பலன்களை அள்ளிக் கொடுக்கும். நவராத்திரியில் அந்தந்த நாளுக்குரிய நிற உடைகள் அணிவது, அந்த நிற மலர்களை சமர்ப்பிப்பது, அதற்கேற்ற நைவேத்யங்களை படைப்பது ஆகியவை அனைத்தும் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும், ஆன்மிக சிந்தனையையும் ஊக்குவிக்கும். இதோ ஒன்பது நாட்களுக்கும் உரிய நிறங்களும் அதன் பலன்களும்.
முதல் நாள் - மஞ்சள்
மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, ஆனந்தம், அறிவு ஆகியவற்றின் சின்னம். மஞ்சள் அணிவதால் மனதில் நம்பிக்கை அதிகரித்து சோம்பல் குறைகிறது. அம்மன் வடிவில் வலிமையும் புத்திசாலித்தனமும் அதிகரிக்க உதவும் நிறம் இது.
இரண்டாம் நாள் - வெள்ளை
வெள்ளை தூய்மையையும் அமைதியையும் குறிக்கிறது. இந்த நாளில் வெள்ளை உடையையும், வெள்ளை மலர்களையும் பயன்படுத்தினால் மன அமைதி, ஆன்மிக சிந்தனை, பரிசுத்தம் ஏற்படும்.
மூன்றாம் நாள் - சிவப்பு
சிவப்பு நிறம் சக்தியின் நிறம். இதை அணிவதால் தைரியம், உற்சாகம், உயிர் சக்தி அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றல் களைத் தகர்த்து நமக்கு நேர்மறையான மாற்றங்களை தரும்.
நான்காம் நாள் - நீலம்
நீல நிறம் செழிப்பு, வளம் மற்றும் சிந்தனையின் ஆழத்தை குறிக்கிறது. இந்த நாளில் நீல நிறத்தை அணிவதால் வாழ்க்கையில் சமநிலை, அமைதி, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
ஐந்தாம் நாள் - பச்சை
பச்சை நிறம் இயற்கையையும் ஆரோக்கியத்தையும் குறிக்கும். மன நிம்மதி, உடல் நலம், வளர்ச்சி ஆகியவை பச்சையின் பயன்கள். குடும்ப உறவுகள் சீராகஇயங்கவும் பச்சை நிறம் உதவுகிறது.
ஆறாம் நாள் - ஆரஞ்சு/காவி
ஆரஞ்சு நிறம் ஆன்மிக ஆற்றலை அதிகரிக்கும். மன உற்சாகத்தையும் ஈர்ப்பு சக்தியையும் வளர்க்கும். ஆரஞ்சு அணிவதால் உள்ளத்தில் நேர்மறை எண்ணங்கள் பெருகும்.
ஏழாம் நாள் - சாம்பல்
சாம்பல் நிறம் சமநிலையை குறிக்கிறது. இது தன்னம்பிக்கையை வளர்க்கும். சவால்களை சமாளிக்கும் மனநிலையை ஏற்படுத்தும் நிறம். நவராத்திரியில் இதனை அணிவதால் தியான சக்தி கூடும்.
எட்டாம் நாள் - ஊதா
ஊதா நிறம் கற்பனைக்கும் ஆன்மிக சக்திக்கும் அடையாளம். செழிப்பு, புகழ், பேராற்றல் ஆகியவற்றை தருகிறது. அம்மனின் தெய்வீக ஆற்றல் நம்முள் வலுவாக வெளிப்படும்.
ஒன்பதாம் நாள் - இளம் சிவப்பு/பிங்க்
பிங்க் நிறம் அன்பையும் பாசத்தையும் குறிக்கும். இதனை அணிவதால் உறவுகள் வலுவடையும், மனதில் பாசம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் நிறைந்திருக்கும்.நவராத்திரியில் ஒன்பது நிறங்களுக்கும் தனித்தனி ஆற்றல்கள் உள்ளன. அந்தந்த நாளில் அவற்றைப் பயன்படுத்துவதால், நம் வாழ்க்கையில் தெய்வீக சக்தியும் மன அமைதியும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அதற்கேற்ற உடை, மலர், நைவேத்யம், ஸ்லோகம் ஆகியவற்றால் அம்மனை வழிபட்டால், திருவிழா முழுமையடையும். மேலும் நவராத்திரி பூஜையில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கும் இந்த நிறங்கள் அடிப்படையில் தாம்பூல அன்பளிப்புகள் கொடுக்கலாம். எங்கள் வீட்டில் கொலு வைக்கும் முறை இல்லை என்றாலும் அலுவலகம், கல்லூரி வெளியில் செல்லும் போது கூட இந்த நிறங்களை நவராத்திரி நாட்களில் உடுத்திக் கொள்ளலாம். மேலும் கோவில்களில் நடக்கும் பூஜைகளுக்குக்கூட இந்த நிற உடைகள் அணிந்து கலந்துகொள்ள பலன் கிடைக்கும்.
- எஸ்.விஜயலட்சுமி.