1973ல் பாலிவுட் நடிகை பயணித்த விமானத்தை கடத்தியவரின் மனைவி நேபாள இடைக்கால பிரதமர்: 52 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான அதிர்ச்சி
காத்மாண்டு: நேபாளத்தின் புதிய இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவியேற்ற நிலையில், அவரது கணவரே 1973ல் நடந்த விமானக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் கடந்த 1973ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி, அந்நாட்டின் முதல் விமானக் கடத்தல் சம்பவம் அரங்கேறியது. பிரத்நகரில் இருந்து காத்மாண்டு சென்றுகொண்டிருந்த ராயல் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம், நேபாள ராஷ்ட்ரா வங்கிக்குச் சொந்தமான பெருந்தொகைப் பணத்தை ஏற்றிச் சென்றது.
அப்போது, நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துர்கா பிரசாத் சுபேதி மற்றும் அவரது கூட்டாளிகள், மன்னராட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு நிதி திரட்டும் அரசியல் நோக்கத்துடன் அந்த விமானத்தைக் கடத்தினர். கடத்தப்பட்ட விமானம், இந்தியாவின் ஃபோர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் தரையிறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் விமானத்தில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, பயணிகள் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் தப்பிச் சென்றனர். அந்த விமானத்தில் பிரபல பாலிவுட் நடிகை மாலா சின்ஹா என்பவரும் பயணித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓராண்டுக்குள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட துர்கா பிரசாத் சுபேதி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளம் தலைமுறையினர் நடத்திய மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாட்டின் புதிய இடைக்காலப் பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி நேற்றிரவு பதவியேற்றார். நேபாளத்தின் முதல் பெண் இடைக்கால பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்தச் சூழலில்தான், 52 ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தைக் கடத்திய துர்கா பிரசாத் சுபேதிதான், பிரதமர் சுசிலா கார்க்கியின் கணவர் என்ற தகவல் தற்போது ஊடகங்களில் வெளியாகி அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.