விமான விபத்து செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கான விதியை வகுக்ககோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விமான விபத்து செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் மொத்தம் 259 பேர் பலியாகினர்.
இந்த விபத்துக்கு விமான பைலட் தான் காரணம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஊடகங்கள் சரிபார்க்கப்படாத, யூகமான, அவதூறான கருத்துகளை பரப்பி வருதாக கூறி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விமான விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் ஊடகங்கள் ஆதாரமற்ற வகையில் செய்தி வெளியிடுவது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.என்.ஸ்ரீவத்ஸவா மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.