Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயர்கல்வியை முன்கூட்டியே திட்டமிடுங்கள்!

வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமென்றால் அதற்குத் தீர்க்கமான திட்டமிடல் வேண்டும். திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும்போதுதான் வெற்றிகரமான பாதையை அமைக்க முடியும். அந்த வகையில் பள்ளி மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்கான திட்டத்தை பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டுகளில் திட்டமிட வேண்டியது அவசியமாகும்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக ‘நான் முதல்வன்’உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகப் பொறியியல் துறை தேர்வு செய்கின்ற மாணவர்கள், அகில இந்திய அளவில் முதலில் JEE Main பிறகு Advanced தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும். JEE Main தரவரிசையில் மட்டும் இடம்பெற்று, JEE Advanced தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் National Institute of Technology மற்றும் மத்திய அரசின் உதவி பெறும் கல்லூரிகள் மேலும் JEE Main மதிப்பெண்களை வைத்து இடம் தரும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொறியியல் தேர்வுகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. அவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியலில் (Maths, Physics, Chemistry) பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம், MIT மற்றும் அதனுடைய உறுப்புக் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சேரலாம். இதற்குச் சரியான நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதைத் தாண்டி, மருத்துவக் கல்லூரி சேர விருப்பம் உள்ளவர்கள், அகில இந்திய அளவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர, நீட் தேர்வை எழுத வேண்டும். அதன் தரவரிசையில் இடம் பெற வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில், MBBS, BDS படிப்புகளும், BAMS, BUMS, BHMS, BSMS, ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு எழுத வேண்டும். BNYS போன்ற படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் படிக்க நுழைவுத் தேர்வுகள் தேவையில்லை. இவை தவிர, கட்டடக்கலை படிப்பிற்கு JEE Main இரண்டாவது தேர்வெழுதி இடம் பெறலாம். இதைத் தாண்டி இந்தியாவில் உள்ள கட்டடக்கலை சார்ந்த கல்லூரிகளில் சேர நாட்டா NATA தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும்.

அகில இந்திய அளவில் விவசாயம் பற்றிய பட்டப் படிப்பிற்கு, விவசாயப் பல்கலைக்கழகத்தில் சேர ICAR (Indian Council of Agricultural Research)என்ற நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் இங்கு இடம் கிடைக்கும். இதேபோல் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு (Veterinary Science), கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு தேவையில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேரலாம்.

கடல் சார்ந்த படிப்புகள் படிப்பதற்கு IMU (Indian Marine University) அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதைப்போலவே புள்ளியியல் படிப்புகளுக்கு Indian Statistical Institute அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில், Chennai Mathematical Institute ஒரு நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இது கணிதம் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆகும். அறிவியலில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் NEST, IISER தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்வெளி சார்ந்த படிப்புகளுக்கு Indian Institute of Space Technology நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இது மட்டுமின்றி, இந்திய பாதுகாப்புப் படைகளில் சேர்வதற்கு National Defence Academy நடத்தும் NDA தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன ஒன்று பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மற்றொன்று பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு நடைபெறும். இதில் இரண்டு தேர்வுகள் உள்ளன. முதலில் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற பின்பு நேர்முகத் தேர்வு நடைபெறும். இவற்றில் தேர்ச்சி அடைகின்ற மாணவர்கள் டேராடூன் என்ற இடத்தில் தரைப்படைக்கும், எழில்மலை என்ற இடத்தில் கப்பற்படைக்கும் ஹைதராபாத்தில் விமானப் படைக்கும் உள்ள கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புப் பெற்று பயிற்சியும் பெற்று உடனடியாக ராணுவ அதிகாரிகளாகப் பொறுப்பேற்பார்கள். அதேபோல விமானியாகச் சேர்வதற்கு IGRUA தேர்வு எழுத வேண்டும். அதேபோல விமானப் பணிப்பெண்ணாகச் சேர்வதற்கும் தேர்வுகள் உள்ளன.

அகில இந்திய சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு என்ற CLAT, ALET தேர்வும் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில்

கல்லூரிகளில் சேரலாம்.

அதேபோல் IIT வடிவமைப்புப் பற்றிய படிப்புகளுக்கு UCEED என்ற தேர்வு எழுத வேண்டும். அதேபோலவே நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைனிங் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் உள்ளன. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி NIFT தேர்வினையும் எழுத வேண்டும்.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் உணவக மேலாண்மைத் துறைக்கு NCHMCT தேர்வும் எழுத வேண்டும். அதேபோல மைசூரில் உள்ள கல்வியியல் பல்கலைக்கழகம் ஆசிரியர் பயிற்சிகளுக்கான படிப்புகளை தருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டப்படிப்பு, உணவக மேலாண்மை, ஃபேஷன் டெக்னாலஜி இவற்றில் சேர 12ஆம் வகுப்பில் எந்தக் குழுவில் வேண்டுமானாலும் படித்திருக்கலாம். கணக்கியல் துறையில் சேர்வதற்கு அவர்கள் ICAI, ICMAI, ICA ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர CUET தேர்வுக்குவிண்ணப்பிக்க வேண்டும். கலை அறிவியல் கல்லூரிகளில் B.Sc, B.A சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகள் B.P.T, B.OT உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை. திட்டமிட்டு செயல்பட வாழ்த்துகள்!