Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரண்டை, மருதாணி, கரிசலாங்கண்ணி...மதிப்புக்கூட்டி லாபம் பார்க்கும் பெண் விவசாயி!

சின்ன வயசுலருந்தே காய்கறிச்செடிகள் வளத்துக்கிட்டு இருந்தேன். இப்போ பிரண்டை, கரிசலாங்கண்ணி, மிளகாய், செம்பருத்தி மாதிரியான செடிகொடி வகைகளை வளக்கறேன்” என விவசாயத்துக்கு வந்த தனது ஆரம்ப கால கதையைச் சொல்லத் தொடங்கினார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பரிமளமங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதா. 5 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மதிப்புகூட்டல் என பரபரப்பாக செயல்பட்டு வரும் இவரைச் சந்தித்துப் பேசினோம். “10 ஏக்கர் குததகைக்கு எடுத்து விவசாயம் செய்றோம். அதுல அப்பா முருங்கை, தென்னை எல்லாம் வச்சிருக்கார். அதுல கொஞ்சம் இடத்துல நான் மூலிகைச் செடிகளை விளைவிக்கறேன். கனவு மெய்ப்பட வேண்டும்என்ற பேர்ல யூட்யூப் சேனலும், இன்ஸ்ட்டாகிரம் பேஜும் வச்சிருக்கேன். செடிகொடிகளைப் பற்றி, மூலிகைகளைப் பற்றி அதில் வீடியோ போடும்போது செடிகளின் கன்றுகள், மதிப்புக்கூட்டிய பொருட்கள் வேணும்ன்னு மக்கள் கேட்டாங்க. அப்டி கொஞ்சம் கொஞ்சமா மக்களோட தேவைக்கு ஏற்ற செடிகளை, மூலிகைகளை வளர்க்கத் தொடங்கினேன்” என சந்தை சார்ந்த தனது விவசாய முறையை விளக்கினார்.

“பிரண்டைல 12 வகைகளுக்கு மேல இருக்கு. இதுல நம்மகிட்ட ஓலை பிரண்டை, சதுர பிரண்டை, உருண்டை பிரண்டை, இலை பிரண்டைல 2 ரகம், முப்பிரண்டைன்னு 6 வகை பிரண்டை இருக்கு. இதுல 2 வகைகள்தான் ஊறுகாய்க்கு பயன்படும். இப்போ கன்றாகவே நிறைய பிரண்டையை குடுக்கறதால, ஊறுகாயை கொஞ்சம்தான் செய்றோம். முருங்கைல முத்திய காய்களை செடியிலயே காஞ்சப்புறம் பறிச்சி, முருங்கை விதைகளில் இருந்து பருப்பை எடுத்து அதை பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்றோம். எங்க தோட்டத்துலயே வெளையும் பாவக்காயிலர்ந்து பாவைக்காய் தொக்கு பண்றோம்” என மதிப்புக்கூட்டும் உணவுப் பொருட்களைப் பற்றி பேசினார்.

``இயற்கையா கிடைக்கற அவுரியை எடுத்து, 4 நாள் நிழல்ல காயவைக்கறோம். அப்புறம் அதை பொடி பண்ணி பாக்கெட்ல போட்டு விக்கறோம். இதை ஹேர்டைக்கு பயன்படுத்தறவங்க வாங்கறாங்க. எங்களோட மரத்துல காய்க்கற தேங்காயிலர்ந்து தேங்காய் எண்ணெய் எடுத்து, மூலிகைகளை சேர்த்து ஹேர்ஆயில் செய்யறோம். தேங்காய் எண்ணெயை மிதமா சூடாக்கி, அதுல மருதாணி, செம்பருத்திப் பூக்கள், மகிழம் இலை, அவுரி இதெல்லாம் போடுறோம். நாங்களே வளக்கற வெட்டிவேர் போடுறோம். நாங்க வளக்கற மூலிகைகளை மட்டுமே பயன்படுத்தறோம். வெளியிலர்ந்து எதுவும் வாங்கறதில்ல. இதையெல்லாம் தேங்காய் எண்ணெயில போட்டு, நாலஞ்சு நாள் ஊற வச்சிடுவோம். அப்புறமா பாட்டிலில் ஊற்றி விற்பனைக்குக் குடுப்போம்” என கூந்தல் சார்ந்த பொருட்களின் உற்பத்தியைப் பற்றிக் கூறினார்.

``மூலிகைச்செடிகளை ரெண்டு வருஷமா வளக்கறேன். கொடிசம்பங்கி, சிவப்பு மருதாணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி கன்றுகளை அதிகமா வாங்கிக்கிட்டு போறாங்க. பட்டன் ரோஸ், மஞ்சள் ரோஸ், வாடாமல்லி, செம்பருத்தி, பாரிஜாதம் போன்ற பூவகை கன்றுகளையும் விளைவிக்கறோம். தூதுவளைல வயலட் கலர் பூக்கறது, வெள்ளைக்கலர்ல பூக்கறதுன்னு 2 கலர் இருக்கு” எனப் பலவகை பூக்கள், மூலிகைச் செடிகளின் வளர்ப்பை விவரித்தார். “சொட்டுநீர்ப்பாசனம் போட்டிருக்கோம். உரமா பஞ்சகாவ்யா, தழைச்சத்துக்கு கொளுஞ்சியை பயன்படுத்தறேன். சில நேரங்களில் பூச்சித்தாக்குதல் வந்தா மாவுப்புச்சி தாக்குதல்தான் இருக்கும். இந்தப் பூச்சி இயற்கை, செயற்கைன்னு எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. மாவுப்பூச்சி தாக்குதல் வந்த செடி மேல அழுத்தமா தண்ணி பாய்ச்சினா இந்தப் பூச்சி செடியிலர்ந்து கீழ விழுந்துடும். மண்ல விழுந்தா இதால மீண்டும் செடியில ஏற முடியாது’’ என்று உரம், நீர்ப்பாசனம் மற்றும் பூச்சிக்கட்டுப்பாடு பற்றி கூறினார்.

விற்பனை மற்றும் வருவாய் குறித்து பேசும்போது ``ரகத்துக்கு ஏற்ப கன்றுகளோட விலை இருக்கு. மூலிகை ஹேர் ஆயிலை 200 மி.லி, 500 மி.லி, 1 லிட்டர்ன்னு 3 வகை பேக்கிங்ல குடுக்கறோம். இந்த ஹேர் ஆயிலோட விலை லிட்டருக்கு 1,500 ரூபாய்க்கு குடுக்கறோம். நானே முழுநேரமா பதியம் போடுறது, கன்றுகளை எடுப்பது போல பல வேலைகளைச் செய்றதால செலவு குறைவுதான். பேக் பண்றது, குரியர் அனுப்பறது போன்ற வேலைகளை பிளஸ் டூ முடிச்சிட்டு நீட்டுக்கு தயார் செஞ்சிக்கிட்டு இருக்குற என் பொண்ணு பெரிய சப்போர்ட் பண்றாங்க. தோட்ட வேலைக்கு 2 பேரும் இருக்காங்க. சோஷியல் மீடியா வழியாதான் மார்க்கெட்டிங் பண்றோம். சென்னை, பெங்களூர்ன்னு எல்லா மாநகரங்களுக்கும் குரியர் வழியா அனுப்பறோம். நம்ம தேவைக்கு காய்கறி பயிரிடணும், பக்கத்துல கிடைக்கற மூலிகைகளை வச்சி தோட்டம் போடணுன்னுதான் விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ கன்றுகள், மதிப்புக்கூட்டிய பொருட்கள்னு தொழிலாவே முன்னேறி இருக்கு. செலவெல்லாம் போக, மாசாமாசம் சராசரியா இருபதாயிரம் ரூபாய் கிடைக்குது” என நிறைவாகக் கூறினார்.

தொடர்புக்கு: சுதா: 79041 39265.