திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே உள்ள PINNAR தொழிற்சாலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில்ஆய்வு மேற்கொண்டார். சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இம்மேம்பால கட்டுமானப் பணியை விரைவில், தரமான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு, முன்னோக்கிய கட்டமைப்பு (Pre-fabricated) முறையில், 16,300 டன் எஃகுக் கட்டமைப்புகள் (Pier, Pier-Cap, Girder) மஹாராஸ்டிரம் மாநிலம், மும்பையில் உள்ள எஸ்.ஜி.ஹெவி இரும்பு தொழிற்சாலை, குஜராம் மாநிலம், வதோதராவில் உள்ள கே.பி.கிரீன் இரும்பு தொழிற்சாலை, ஆந்திரா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குளோபல் இரும்பு தொழிற்சாலை, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஸ்ட்ரக் ரைட் இரும்பு தொழிற்சாலை மற்றும் தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாயைம் அருகில் அமைந்துள்ள PENNAR இரும்பு தொழிற்சாலை ஆகிய ஐந்து எஃகு தொழிற்சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், குஜராத், ஆந்திரா, மஹாராஸ்ட்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அமைச்சர் முன்னரே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.
உயர்மட்ட மேம்பால பாலத்திற்கு தேவையான இரும்பு தூண்கள்(பியர்), இரும்பு தூண்களின் தலைப்புப் பகுதிகள் (பியர் கேப்) ஐ-கர்டர்(உத்திரங்கள்) தயாரிக்கப்பட்டு வரும், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் அமைந்துள்ள PENNAR இரும்பு தொழிற்சாலைக்கு இன்று (03.10.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஐந்து தொழிற்சாலைகளிலும் சுமார் 16,300 டன் எடை கொண்ட இரும்பு தூண்கள்(பியர்) மற்றும் தலைப் பகுதிகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் உள்ள PENNAR தொழிற்சாலையில் சுமார் 1436 டன் எடை கொண்ட இரும்பு தூண்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் இரும்பு தூண்கள்(பியர்) மற்றும் தலைப் பகுதிகள் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதற்கு, தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இரும்பு தூண்கள் தயாரிக்கப்பட்டவுடன், சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் PENNAR தொழிற்சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) உடனிருந்தனர்.