விமானிகள், பணியாளர்கள் இல்லாததால் சென்னையில் 62 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் முற்றுகையால் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் விமானத்தை இயக்க விமானிகள், பணியாளர்கள் இல்லாததால் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை 62 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நான்காவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று நள்ளிரவு 12.1 மணியில் இருந்து, காலை 8 மணி வரை 62 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விமானங்கள் தாமதம், ரத்து குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் பயணிகளுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படவில்லை.
அதோடு எந்த விமானங்கள் ரத்து, எவ்வளவு நேரம் தாமதம் என்ற விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. பயணிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் கேட்டாலும் எந்த தகவலும் முறையாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் விமானங்கள் புறப்பாடு, வருகை குறித்து சென்னை விமான நிலைய இணையதளத்தில் பயணிகள் பார்த்தால், அதில் விமானங்கள் ரத்து தாமதம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடாமல் அன்னோன் என்று மட்டுமே இருந்ததால், அந்த விமானம் ரத்தா, கால தாமதமா என்று கூட தெரியாமல் பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். எனவே, ஆத்திரம் அடைந்த பயணிகள் நூற்றுக்கணக்கானோர் சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதிக்குள் சூழ்ந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, விமான நிலைய போலீசார், பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். அப்போது பயணிகள் எந்த விமானம் தாமதம், ரத்து என்பதை எங்களுக்கு தெளிவாக அறிவியுங்கள். இணையதளத்தில் அன்னோன் என்று போடுவதை நிறுத்தி, ரத்து அல்லது தாமதம் என்று தெளிவாக போடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி பயணிகளை சமாதான செய்தனர். இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள அதிகாரிகள் பயணிகளின் உணர்வுகளை மதிக்காமல் பயணிகள் கேட்கும் கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்காமல் இருப்பதாக பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
* இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் நள்ளிரவு 12 மணி வரையில் ரத்து
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் நேற்று மதியத்திலிருந்து மாலை 6 மணி வரை இயக்கப்பட மாட்டாது என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு மேல், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்படுமா என்பது பின்னால் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவு 12 வரையில் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக உள்நாட்டு முனையம் டெர்மினல் 1 பகுதியில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், டெர்மினல் 4 உள்நாட்டு முனையத்திலிருந்து இயக்கப்படும் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக ஒன்றிரண்டு மட்டும் இயக்கப்பட்டன. இன்று 6ம் தேதி (சனிக்கிழமை) இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்படுமா என்பது பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பயணிகள் விமானங்கள் பற்றி விவரங்கள் கேட்டு அறிய, 044-22565113; 044-22565112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

