டெல்லி: விமானிகள் வார விடுமுறையை விடுப்பாக கருதக் கூடாது என்ற விதியை டிஜிசிஏ திரும்பப் பெற்றுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. தொழில்நுட்பக் கோளாறுகள், பாதகமான காலநிலை மற்றும் புதிய பணி விதிகள் ஆகிய இடையூறுகளால் சேவைகள் பாதிக்கப்பட்டதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
மேலும், பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிர்வாகம், விரைவில் சேவைகள் சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்திருந்தது. ஆனால், நேற்றும் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. போதிய அளவில் விமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. பணியாளர்களின் பணி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் இக்குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே போதிய பணியாளர்கள் இல்லையெனில், விமானத்தை இயக்க இண்டிகோவை அனுமதிக்கவேண்டாம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விமானிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. மறுபுறம், டிசம்பர் 8ஆம் தேதி முதல் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, நூற்றுக் கணக்கில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிஜிசிஏ உத்தரவை திரும்பப் பெற்றது. நாடெங்கும் விமானப் பயணிகள் பரிதவித்த நிலையில், விமான நிறுவனங்கள் அழுத்தத்திற்கு டிஜிசிஏ பணிந்தது. வார விடுமுறையை விடுப்பாக கருதும் பழைய முறையை தொடர விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அனுமதி வழங்கியது. விமானிகள் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு டிஜிசிஏ கோரிக்கை விடுத்தது. விதிகள் தளர்த்தப்பட்டதை அடுத்து விமான போக்குவரத்து சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

