மதுரை: திருவள்ளூர் மாவட்டம், அரிமளத்தை சேர்ந்த கண்ணன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில் செட்டிநாடு நகரத்தார் சமூகத்தை சேர்ந்த 20 குடும்பங்களால் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1978ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த திட்டப்படி, ஆண்டுதோறும் இரண்டு குடும்பங்களில் இருந்து டிரஸ்டிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இதன்படி, 2025-2026ல் எங்களது குடும்பத்தின் முறை வந்துள்ளது. ஆனால், இந்து சமய அறநிலையத்துறையால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட கண்டவராயன்பட்டி சொக்கலிங்கத்துக்கு தெரிந்தவரை டிரஸ்டியாக சேர்த்து, எங்களது குடும்பத்தை சேராத சோமசுந்தரம் என்பவரை டிரஸ்டியாக நியமிக்க முயற்சி செய்து வருகின்றனர். இது சட்டவிரோதமாகும். ஏற்கனவே 2022ல் ஐகோர்ட் கிளை அளித்துள்ள தீர்ப்பில், ‘ஒரு குடும்பத்தில் அறங்காவலரை தேர்வு செய்வதில் முடிவு எட்டப்படவில்லை எனில், அதே குடும்பத்திற்குள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ‘எங்கள் குடும்பத்தின் பிரதிநிதியாக என்னை 2025-2026 ஆண்டிற்கான அறங்காவலராக அங்கீகரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் சண்முகநாதன், ‘சோமசுந்தரம் பெயர் சட்டத்துக்கு உட்பட்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித சட்ட மீறலும் இல்லை’ என்றார். இதை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறங்காவலர் நியமனத்தில் 18ம் தேதி வரை யாரையும் புதிதாக நியமனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
