தேனி: தேனி அருகே வீரபாண்டி பகுதியில் இரண்டாம் போக நெல் விவசாயத்திற்காக நெல்பாவும் பணி துவங்கியுள்ள நிலையில், இப்பகுதியில் வளர்ப்பு பன்றிகளால் நெல்பாவும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பாசன நீரினைக் கொண்டு தேனி அருகே வீரபாண்டி அருகே உப்பார்பட்டி பகுதியில் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் முதல்போக விவசாயம் முடிந்து நெல் அறுவடை பணிகள் முடிந்ததையடுத்து, இரண்டாம் போக விவசாயப் பணிகள் துவங்கியுள்ளது. இரண்டாம் போகத்திற்காக இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல்பாவும் பணியை துவங்கியுள்ளனர்.
இந்நிலயில், இப்பகுதியில் சிலர் வளர்த்து வரும் வளர்ப்பு பன்றிகள், நெல்பாவிய வயல்களுக்குள் இறங்கி நெல்மணிகளை தின்று விவசாயத்தை பாழ்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, நெல்பாவும் நிலங்களுக்குள் சிலர் தங்களது வளர்ப்பு பன்றிகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இந்த பன்றிகள் நெல்பாவிய வயல்களுக்குள் சென்று பாவிய நெல்மணிகளை தின்று விவசாயத்தை பாழ்படுத்தி வருகிறது. இதனால் மீண்டும் நெல்மணிகளை பாவும் பணியை தொடங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வயல்பகுதிக்குள் வளர்ப்பு பன்றிகள் மேய்ச்சலுக்கு விடுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


