சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்றன மாணவ, மாணவியருக்கு முதன்முறையாக உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அச்சிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிப் பாடவேளைகளில் விளையாட்டுக் கல்வியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றல் மிக்க உடற்கல்வித் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சி மாணவர்களின் உடல் தகுதியை அதிகரிப்பது நற்பண்புகளை உருவாக்குவது, சமூகத் திறன்களை மேம்படுத்துவதோடு அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுத்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவிட் தொற்று நோய் காலத்திலும் அதைத தொடர்ந்தும் நிலவிய கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அப்போது உடற்பயிற்சி திடல்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மாணவ, மாணவியரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது. இந்த நிலையை மாற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு முறையான உடற்கல்விப் பாடத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் வளமான மாணவர்களை உருவாக்குவதற்கான ஒரு முன்முயற்சியாகவும் இந்த திட்டம் அமைந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் தமிழ்நாடு கலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் வளமான பண்பாடு மரபு வரலாறு கலை அறிவியல், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை புரிந்துகொண்டு அவற்றின் பெருமைகளை போற்ற வேண்டும். இவற்றை கவனத்தில் கொண்டு மாணவர்களின் உடல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் ஒட்டுமொத்த வளச்சியில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. நமது பண்பாடு மற்றும் மரபு குறித்த அவர்களின் மதிப்பு மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்கு உதவும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர்நிலை வகுப்பு மாணவர்களிடையே நுண்தசை இயக்கத் திறனும் ஹார்மோன்கள் மாற்றமும் ஏற்படும் நிலையில் இந்த பருவத்தில் நரம்புத்தசை ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படை திறன்களை மாணவர்களிடம் மேம்பாடு அடையச் செய்யவும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தவும், உடற்கல்வி அறிவு, உடல் வளர்ச்சி, விளையாட்டு கல்வி, தமிழ்நாட்டுப்புற விளையாட்டுகள், மனமகிழ் விளையாட்டுகள், விளையாட்டுப் போட்டிகள், திட்டங்கள், ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், விளையாட்டு காயங்கள், பாதுகாப்பு கல்வி மற்றும் விளையாட்டுகளில் தொழில் வாய்ப்பு ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றன. இதுதவிர மாணவர்கள் மாநில மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும், பதக்கங்களை வெல்லவும், சாதனை உணர்வை மேம்படுத்தவும் தங்களின் உடன் வலிமையை எண்ணி பெருமை கொள்ளவும் இந்த திட்டம் வழிவகுக்கும்.
மேலும், மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இந்த திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு உடற்கல்வி பாடங்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக, பாடப்புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டில் இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் பாடங்களாக நடத்தப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகம் ஒரே புத்தகமாக அச்சிடப்பட்டுள்ள நிலையில் 33 பக்கங்கள் 6ம் வகுப்புக்கும், 60 பக்கங்கள் 7ம் வகுப்புகளுக்கும், 50 பக்கங்கள் 8ம் வகுப்புக்கும், 50 பக்கங்கள் 9ம் வகுப்புக்கும், 33 பக்கங்கள் 10ம் வகுப்புக்கும் பாடங்களாக இடம்பெற்றுள்ளன. இவை தவிர மதிப்பீட்டு கூறுகள், கற்றல் விளைவுகள், உள்ளிட்டவையும் இந்த பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.