நியூயார்க்: அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியா- அமெரிக்க உறவின் எதிர்காலம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கரோலின் லீவிட் கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அதிபர் டிரம்ப் மிகவும் நேர்மறையாகவும் வலுவாகவும் உணர்கிறார் என நான் நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்.
இதில் இந்தியா- அமெரிக்க நாடுகளை சேர்ந்த உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது அதிபர் பிரதமர் மோடியுடன் நேரடியாக தொலைபேசியில் பேசினார். அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் அடிக்கடி தொலைபேசியில் பேசுகின்றனர். அதிபரும், அவரது வர்த்தக குழுவும் இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி மீது டிரம்புக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
