பீஜிங்: பிலிப்பைன்ஸ், அமெரிக்கா,ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு கடற்படை பயிற்சியை மேற்கொண்டதற்கு எதிராக தென் சீன கடலில் சீன குண்டு வீச்சு விமானங்கள் தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொண்டன. தென் சீன கடலின் 90% பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் கடற்படை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் கூட்டு சேர்ந்து இரண்டு நாள் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தியது. ஜப்பான், அமெரிக்க நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. நேற்றுமுன்தினம் இந்த பயிற்சி நடந்த நிலையில் சீன ராணுவத்தின் குண்டு வீச்சு விமானங்கள் சர்ச்சைக்குரிய தென் சீன கடலில், நேற்று தீவிர கண்காணிப்பு ரோந்து பணியை மேற்கொண்டன.
சீன ராணுவத்தின் தெற்கு கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் டியான் ஜூன்லி வெளியிட்ட அறிக்கையில், ந்த நாடுகளின் நடவடிக்கை தென் சீனா கடலில் சீனாவின் இறையாண்மைக்கு விடுத்த நேரடி சவாலாகும். வெளிநாட்டு ராணுவ நடவடிக்கைகளை தடுப்பதற்கும், அதன் பிராந்திய உரிமை கோரல்களை வலுப்படுத்துவதற்கும் சீனாவின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு, பதற்றங்களை உருவாக்குவதை பிலிப்பைன்ஸ் நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


