மணிலா: மத்திய பிலிப்பைன்சில் வீசிய கல்மேகி புயலுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 26 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக செபு மாகாணத்தில் பெரும்பாலான உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புக்களை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டின் மேற்கூரைகளில் ஏறி தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்துச்செல்லப்பட்டன. செபு மாகாணத்தில் மட்டும் மழை, வெள்ளத்துக்கு 49 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 26 பேரில் 13 பேர் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது.
