மணிலா: பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு கால்மேகி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது. அங்குள்ள பாலவான் தீவு அருகே மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கடலோர மாகாணங்களான நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்டவற்றில் பலத்த மழை கொட்டியது. இதனால் அங்குள்ள பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளித்தது. 7 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
