Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6வது கட்ட மக்களவை தேர்தல்; 58 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 6வது கட்டத்தில் 58 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. 428 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 6வது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒடிசாவில் 6 எம்பி தொகுதிகள் மற்றும் 42 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்த 58 தொகுதிகளிலும் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளனன. 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வெப்ப அலை நிலவுவதால் ஓட்டுப்பதிவு மையங்களில் போதுமான ஏற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் 7 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று வாக்குப்பதிவு முடிந்ததும் மொத்தம் 486 தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெற்றுவிடும். இறுதிகட்டமாக ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முக்கிய வேட்பாளர்கள்: ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிரிஷன் பால் குர்ஜார், பாஜ வேட்பாளர்கள் மேனகா காந்தி, சம்பித் பத்ரா, அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மகள் பன்சூரி சுவராஜ், டெல்லி பா.ஜ முன்னாள் தலைவர் மனோஜ் திவாரி, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா, ராஜ் பப்பர், குமாரி செல்ஜா, கன்னையா குமார் ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். அரியானா மாநிலம் கர்னால் பேரவை இடைத்தேர்தலில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார்.

சோனியா, ராகுல்காந்தி ஓட்டுப்போடுவது எங்கே?: டெல்லியில் 7 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடப்பதால் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள நிர்மான் பவனில் வாக்களிக்க உள்ளனர்.

இமாச்சல் முதல்வர் ஹெலிகாப்டரில் சோதனை: இமாச்சல் மாநிலத்தில் தலேரியா பகுதியில் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற போது அவரது ஹெலிகாப்டரை தேர்தல் செலவின பார்வையாளர் குண்டன்யாதவ் நேற்று ஆய்வு செய்தார்.