Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2ம் கட்ட மெட்ரோ திட்டம் முதலாவது வழித்தடத்தில் டிசம்பரில் ரயில் சேவை: பறக்கும் வழித்தடத்தில் 2 ஆண்டில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்; இயக்குநர் சித்திக் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ பணியின் முதல் வழித்தடம் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஊபர் செயலி மூலம் சென்னை மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மெட்ரா ரயில் பல வழிகளில் மக்களை சென்றடைய வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். வாட்ஸ் அப், பேடிஎம், நம்ம யாத்திரி என பல வழிகளில் மெட்ரோ டிக்கெட்களை வழங்கி வருகிறோம். அதன் ஒருபகுதியாக ஊபர் உடன் இணைந்துள்ளோம். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. அதற்கு தேவையான நிலம் எடுக்கும் பணிகளும் மற்ற பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

தொடக்கத்தில் மெட்ரோ செயலியில் க்யூஆர் கோர்டு மூலம் மட்டுமே டிக்கெட் பெற முடிந்தது. தற்போது, யார் வேண்டுமானாலும் எந்த செயலி மூலமாகவும் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெற வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். சென்னையில் வாட்டர் மெட்ரோ சாத்தியம்தான். ஏற்கனவே திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பறக்கும் ரயில் சேவை இன்னும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு படிப்படியாக மாற்றம் செய்யப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒப்பந்தம் செய்யப்படும்.

தற்போது ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக பழைய பாதைகள் எப்படி, அதை எவ்வாறு மேம்படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டுகளாகும். அதற்கு பிறகு மெட்ரோ ரயில்கள் இயங்கும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர் என மூன்றுக்கும் நிலம் எடுப்பு பணிகளுக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும். இப்போதைக்கு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 2ம் கட்ட மெட்ரோ பணியின் முதல் வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்திற்கு ஒருமுறை அடுத்தடுத்த வழித்தடம் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள், ஊபர் இயக்கம் மற்றும் தளங்களின் மூத்த இயக்குநர் மணிகண்டன் தங்கரதம் மற்றும் நுகர்வோர் வளர்ச்சி பிரிவுகள் விநியோக வளர்ச்சி இந்தியா மற்றும் தெற்காசியா இயக்குநர் சிவ சைலேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.20 முதல் 50 சதவீதம் தள்ளுபடி ஊபர் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஊபரை பொது போக்குவரத்து உள்கட்டமைப்புடன் இணைக்கிறது. அதோடு சென்னையில் உள்ள பயணிகள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மெட்ரோ டிக்கெட்டுகளில் 50 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். கூடுதலாக இணைக்கப்பட்ட பயணத்தை எளிதாக்குவதற்காக சென்னையில் உள்ள மெட்ரோ நிலையங்களில் தொடங்கும் அல்லது முடிக்கும் சவாரிகளுக்கு ஊபர் ஆட்டோ மற்றும் ஊபர் மோட்டோ இரண்டிலும் ரூ.20 வரை 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் மாதம் முழுவதும் செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.