காங்கயம் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருந்து கழிவுகள்: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பொத்திபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அவினாசி பாளையம் புதூரில் அர்த்தநாரிபாளையம்- காளிவலசு சாலையோரம் மூட்டைகள் கிடந்தது. இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பிரித்து பார்த்தபோது அதில் தமிழக அரசின் முத்திரை பதித்த மருந்துபாட்டில்கள், சிரஞ்சு, மாத்திரைகள் பெட்டி பெட்டியாக இருந்துள்ளது. இவை அனைத்தும் கடந்த பிப்ரவரி மாதம் காலாவதியான மருந்துகள் ஆகும். சுற்றுச்சூழலை கெடுக்கும் வகையில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலும், நள்ளிரவிலும் கொட்டிவிட்டு செல்வது வழக்கம் ஆகிவிட்டது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு குப்பை மேடுகளாகவும், காற்று, நிலம் மாசுபடுகிறது. பொதுமக்கள், கால்நடைகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வாடகை லாரி மற்றும் வாகனங்கள் மூலம் அவ்வப்போது எங்கள் பகுதியில் குப்பைகளை கொட்டிவந்தனர். இப்போது இந்த மருத்துவ கழிவுகளும் சேர்ந்து கொண்டன. இந்த குப்பைகளை சம்பந்தப்பட்ட சுகாதார துறையிடம் ஒப்படைத்து, அழிக்காமல் பொதுமக்கள் வாழும் சுகாதாரமான இடத்தில் வந்து கொட்டியுள்ள நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். இந்த மருந்து எந்த மருத்துவமனைக்கு அல்லது மெடிக்கலுக்கு கொடுக்கப்பட்டது என கண்டுபிடித்து தமிழக சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


