பி.ஜி. நீட் தேர்வில் விண்ணப்பித்து என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 140 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலம்..!!
மும்பை: உயர்ஜாதி ஏழைகள் என பி.ஜி. நீட் தேர்வில் விண்ணப்பித்து என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 140 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது. உயர் ஜாதி ஏழைகள் பிரிவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாகவே இருக்க வேண்டும். வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்கள் ரூ.1 கோடி செலுத்தி என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேர்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஒரு லட்சத்து பத்தாயிரமாவது ரேங்க் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர் ரூ.1 கோடி செலுத்தி என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளார்.
வெலகாவியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு கோடி செலுத்தி உயர் ஜாதி ஏழைப் பிரிவு மாணவர் சேர்ந்துள்ளார். நவி மும்பை தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 16 இடங்களில் 4 இடங்களில் உயர் ஜாதி ஏழை மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நீட் பி.ஜி. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்ஆர்ஐ-ல் அதிக கட்டணம் செலுத்தி சேர்வதாக குற்றசாட்டு எழுந்தது. 140 மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக மற்றும் என்.ஆர்.ஐ. இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வசூலிக்கப்படும் நிர்வாக ஒதுக்கீட்டில் உயர் ஜாதி ஏழை மாணவர்கள் சேர்ந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதே போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி ஈ டபிள்யூ எஸ் சான்றிதழ் கொடுத்து முதுநிலை நீட் தேர்வை எழுதியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், உயர்ஜாதி ஏழைகள் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சான்றிதழின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாவதாக மருத்துவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், நேர்வழியில் மருத்துவம் படிக்க முயலும் ஏழை மாணவர்களின் வாய்ப்புகளை பறிப்பதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.


