பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (46), பாமக பிரமுகர். இவரது 17 வயது மகன், பண்ருட்டியை அடுத்த அங்குசெட்டிபாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், கல்லூரியில் குப்புசாமி மகன் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே கல்லூரி வாசலில் நின்றிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் குப்புசாமி மகன் தனது வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில், பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென குப்புசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பினர். அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு குப்புசாமி வீட்டின் எதிரில் இருந்த கொய்யா மரத்தின் மீது விழுந்து மரம் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு குப்புசாமி குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.