கரூர் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பளிக்க தவறியதாக குற்றச்சாட்டு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த த.வெ.க உறுப்பினரும் வழக்கறிஞருமான ஜி.கார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற கட்சியின் பிரச்சார கூட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர்.
இந்த கூட்டத்திற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஏற்படுத்தவில்லை. உரிய பாதுகாப்பு இல்லாததுதான் இந்த விபத்து நடைபெற காரணமாக அமைந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் முறையான திட்டமிடல் இல்லாததே விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, கடமையை செய்ய தவறிய மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, கரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.