புதுடெல்லி: கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் த.வெ.க கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு முறையீட்டை வைத்தார்.
அதில், ‘‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மாநில அரசு தரப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களோடு, இந்த மனுவையும் இணைத்து வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உத்தரவிட்டார்.