Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களிடம் மனுக்கள் வாங்கிய போது அத்துமீறல் டெல்லி முதல்வர் மீது தாக்குதல்: தலைமுடியை பிடித்து இழுத்து அடிஉதை; குஜராத்தை சேர்ந்தவர் கைது

புதுடெல்லி : டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை கொலை முயற்சியுடன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் முதல்வருக்கு கை, தலை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை தாக்கிய குஜராத்தை சேர்ந்த நபரை கைது செய்யப்பட்டார். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்கி வருகிறார். இதன் காரணமாக, தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியான ‘ஜான் சன்வாய்’ என்று சொல்லப்படும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி, இந்த முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

வழக்கம் போல் நேற்று காலை நடைபெற்ற ’ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கினார். அப்போது, பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி ஒருவர் முதல்வரை அணுகி பேசினார். அவர் கூறியதை ரேகா உன்னிப்பாக கேட்டார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் அந்த நபர் திடீரென்று ரேகாவின் கைகளையும், தலைமுடியையும் பிடித்து இழுத்து தாக்கத் தொடங்கினார். இதனால், ரேகா நிலைகுலைந்தார். அவரை சுற்றி நின்ற பாதுகாவலர்களும், பொதுமக்களும் சுதாரித்துக் கொண்டு, தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குஜராத் மாநிலம், ராஜ் கோட்டை சேர்ந்த சக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜிபாய்(41) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளன. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்தப்பட்டதும் முதல்வர் ரேகா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு கை, தோள்பட்டை, தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* ஒரு நாள் முன்பே நோட்டம் செல்போனில் ரகசிய பேச்சு

போலீசார் கூறுகையில், ‘முதல்வர் ரேகா மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர், 2 நாட்களுக்கு முன்பே டெல்லி வந்து தங்கியுள்ளார். முதல்வர் ரேகாவின் அலுவலகம், வீட்டை அவர் ஒரு நாள் முன்பாகவே வந்து நோட்டமிட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் அது பதிவாகி உள்ளது. அப்போது, தோளில் அவர் பையை மாட்டிக் கொண்டுள்ளார். ரேகாவின் அலுவலகம், வீட்டை நோட்டமிட்ட பிறகு, அவர் செல்போனில் பேசும் காட்சியும் பதிவாகி உள்ளது. அவர் யாரிடம் ரகசியமாக பேசினார் என்பது பற்றி அறிய, அவருடைய செல்போன் ஆய்வு செய்யப்படும்,’ என தெரிவித்தனர்.

* தெருநாய்களை அகற்றுவதற்கு எதிராக டெல்லி சென்றார் - தாய் தகவல்

முதல்வரை தாக்கியவரின் தாயார் பானுபென் சகாரியா ராஜ்கோட்டில் இது தொடர்பாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது மகன் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். தெருநாய்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தேசிய தலைநகருக்குச் சென்றார். என் மகன் நாய்கள், பசுக்கள் மற்றும் பறவைகளை நேசிக்க கூடியவர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மிகுந்த கவலையுற்றார். சிலநாட்களுக்கு முன்பு ஹரித்வாருக்கு சென்றார். அங்கிருந்து தொலைபேசியில் என்னிடம் பேசினார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்க, டெல்லி செல்வதாக கூறினார். எப்போது திரும்புவாய் என்று கேட்டபோது, எதுவும் கூறாமல் இந்த தகவலை மட்டுமே தெரிவித்திருந்தார்’ என்று கூறியுள்ளார்.