நாளை முதற்கட்ட மனுத்தாக்கல் முடிகிறது பீகார் தேர்தலில் நீடிக்கும் குழப்பம்: தொகுதி பங்கீடு முடியாமல் தேஜஸ்வி மனுத்தாக்கல் சிராக் கட்சி தொகுதியில் வேட்பாளரை நிறுத்திய நிதிஷ்
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட மனுத்தாக்கல் நாளை முடிவடைய உள்ள நிலையில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தொகுதி பங்கீடு முடியாத நிலையில் தேஜஸ்வி நேற்று மனுத்தாக்கல் செய்தார். 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 121 தொகுதிகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி அக்டோபர் 20 .
ஆனால் பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் சரிவரமுடியவில்லை. இருப்பினும் முதற்கட்டமாக 71 வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ நேற்று முன்தினம் வெளியிட்டது. நேற்று மேலும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ அறிவித்தது. பீகார் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் நேற்றுமுன்தினம் பாட்னாவில் பாஜ மாநில தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். அவரது பெயர் பா.ஜவின் 2வது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் அலிநகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பக்சார் தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவும், சீதாமர்ஹி தொகுதியில் முன்னாள் எம்பி சுனில் குமார் பிந்து, கவுராபவுரம் தொகுதியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுஜித் குமார் சிங் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். நிதிஷ் கட்சி 57 வேட்பாளர்கள்: முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 101 இடங்களில் நேற்று முதற்கட்டமாக 57 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இதில் 5 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். மொகாமா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தாதா அரசியல்வாதி அனந்த் குமார் சிங் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஜேடியு மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாஹாவும் மஹ்னார் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் விரும்பிய 5 தொகுதிகளில் நிதிஷ் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். நிதிஷ் வெளியிட்ட முதல் பட்டியலில் உள்ள 57 வேட்பாளர்களில் 30 பேர் புதியவர்கள், 27 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி வேட்புமனு தாக்கல்: இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை.
இருப்பினும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வியாதவ் தனது பாரம்பரிய தொகுதியான ராகோபூர் தொகுதியில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். தந்தை லாலு பிரசாத், தாய் ராப்ரி தேவி, சகோதரி மிசாபாரதி எம்பி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுத்தாக்கல் செய்ய சென்ற போது சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான ஆதரவாளர்கள் நின்றனர். இதனால் அவர் மனுத்தாக்கல் செய்யும் இடத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு பெரும் கூட்டம் கூடியது.
தேஜஸ்வி யாதவ் காரில் இருந்து இறங்கி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய அலுவலகத்தை நோக்கி சில அடிகள் நடந்து சென்றபோது, கலெக்டர் அலுவலகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளில் 14 வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
* பா.ஜ கூட்டணியில் விரிசல்
உத்தரபிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி பீகார் தேர்தலில் தனித்து வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பீகாரில் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா கூறுகையில்,’ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எதுவும் சரியில்லை. .எல்லாம் சரியாகிவிடும். இந்த நம்பிக்கையுடன் நாங்கள் டெல்லிக்குச் செல்கிறோம்’ என்றார்.
* தாதாவுக்கு ரூ.37 கோடி சொத்து 28 குற்றவழக்குகள்
பீகாரில் மொகாமா தொகுதியில் ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ‘சோட்டே சர்க்கார்’ என்று பிரபலமாக அறியப்படும் தாதா அனந்த் குமார் சிங், ரூ.37.88 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வைத்துள்ளார். அவர் மீது 28 குற்ற வழக்குகளும் உள்ளன.