சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்!!
சென்னை: சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் உரிமம் பெறாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இன்றைய கூட்டத்தில் மொத்தம் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்படது.
அதில், குறிப்பாக சென்னை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பது; செல்லப்பிராணிகளை பொது இடங்களில் கழுத்து பட்டை இன்றி அழைத்து சென்றால் உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிப்பது; பொது இடங்களில் செல்லப்பிராணிகள் கழிவு ஏற்படுத்தினால், அதனை சுத்தம் செய்வது உரிமையாளரின் கடமை; இந்த விதிமுறைகளை நவம்பர் 24ம் தேதி முதல் அமல்படுத்துவது;
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்களின் விவரங்களை சேகரிக்கும் வகையில் 2 லட்சம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்வது; சென்னை மயிலாப்பூர் மந்தவெளிப்பாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் ”சீர்காழி கோவிந்தராஜன் சாலை” என பெயரிடுவது; ரூ.186 கோடியில் 3 ஆண்டுகளுக்கு தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
