பெரு : பெரு நாட்டில் 650 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரு நாட்டை சிலியுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் லாமோசாஸ் என்ற நிறுவனத்தின் பேருந்து 40 பயணிகளுடன் காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவு ஒன்றில் திரும்பும் போது, எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து 650 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 37 பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள், இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 24 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளில் சமீப ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்து கருதப்படுகிறது.
