சென்னை: பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி நாளை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று “சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்" என முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க;
தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2025 அன்று காலை 10.30 மணி அளவில், அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில், முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்த பின்வரும் "சமூகநீதி நாள் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சியினை நடத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்றையதினம் காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.
“சமூக நீதி நாள் உறுதிமொழி"
*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன்!
*சுயமரியாதை ஆளுமைத்திறனும் - பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
*சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேள்!
*மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
*சமூகநீதியையே அடத்தனமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!
இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.