Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தந்தை பெரியார் பிறந்தநாள்.. இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இனப்பகையை சுட்டெரிக்கும் பெரும் நெருப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தனது எக்ஸ் தளப்பதிவில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்:

தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!

தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

*கனிமொழி எம்.பி. வாழ்த்து:

காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்!

நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர். மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

*அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து:

பல நூறு ஆண்டுகளாய் சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும் - மூடநம்பிக்கைகளாலும், தமது பழம்பெருமையை இழந்து அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த திராவிட சமுதாயத்தின் 'அறிவு விடுதலைக்காக' இயக்கம் கட்டி சுயமரியாதை உணர்வூட்டி, இன்றைய நமது முன்னேற்றங்களுக்கு எல்லாம் வலுவான கொள்கை அடித்தளம் அமைத்துத் தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று!

திராவிட மாடல் அரசினால் சமூகநீதி நாளாக போற்றப்படும் இந்நாளில் அனைத்து துறைகளிலும் சம தர்மம், சம உரிமை, சம ஆட்சித் தன்மை, சம நோக்கு, சம நுகர்வு, சம அனுபவம் ஏற்படுத்த வேண்டும் என்கிற பெரியாரின் இலட்சியத்தை நிறைவேற்ற அயராது உழைப்போம் என உறுதி கொள்வோம்!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

*அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து:

"ஆதிக்கம் தான் எனது எதிரி" என முழங்கி இச்சமூகத்தில் புரையோடிக்‌ கிடந்த தீண்டாமை, அடிமைத்தனம் உள்ளிட்ட சமூக அழுக்குகளை தன் சமத்துவ சிந்தனையால் துடைத்தெறிந்த சமூக நீதிப் போராளி!

சாதி - தீண்டாமை - பெண் அடிமைத்தனம் - மூடநம்பிக்கை உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களை தன் பகுத்தறிவால் வென்றுகாட்டிய அறிவாசன்!

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு எனக் கூறிய சுயமரியாதைக்காரர்; அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த கலகக்காரர்!

உலக அரங்கில் மானுட விடுதலைக்கு வழிகாட்டியாகத் திகழும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான இன்று பாசிச சக்திகளுக்கு எதிராகக் களமாடி, சமத்துவ சமுதாயம் படைத்திட உறுதியேற்போம்!

பெரியார் வாழ்க! சமத்துவம் ஓங்குக!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

*அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!

உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!

சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!

யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்!

பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!

வாழ்க பெரியாரின் புகழ்!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து:

பகுத்தறிவு, அறிவியல் அணுகுமுறை, மக்கள் உரிமைகள், சுயமரியாதை மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர் – சமூக சமத்துவத்தின் சின்னம், புரட்சிக்கான மாபெரும் ஆதரவாளர், மத மூடநம்பிக்கைகள், போலித்தனம், சடங்குகள், சாதி, வர்ணாசிரம முறை, பெண்கள் மீதான அடக்குமுறைகளை கடுமையாக எதிர்த்து போராடிய மகத்தான சிந்தனையாளர், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம்.

தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தந்தை பெரியார். கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சுயமரியாதை, சுதந்திரப் போராட்டம் என பன்முகப் போராட்டங்களில் ஈடுபட்டு, சமூகத்திற்குப் நன்மைகள் செய்தவர்.

சமூக மாற்றத்தின் தலைவராகவும், பெண்கள் விடுதலையின் முன்னோடியாகவும், பகுத்தறிவின் ஒளியைப் பரப்பிய பெரியாரின் சிந்தனைகளும், கொள்கைகளும் சமத்துவம், கல்வி, சுயமரியாதை, பெண்கள் உரிமை ஆகியவற்றின் வழிகாட்டியாக இன்னும் ஒலிக்கின்றன.

அவர் நேரடியாக அரசியலில் ஈடுபடாத போதிலும், இன்றளவும் அரசியல், சமூக இயக்கங்கள் அனைத்தும் அவரின் சிந்தனையை மையமாகக் கொண்டு இயங்குகின்றன.

அவரது பிறந்த நாள் கடந்த ஆண்டிலிருந்து 'சமூக நீதி நாள்' எனக் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படுகிறது என்பது பெருமைமிகு நிகழ்வாகும்.

பெரியார் பிறந்த நாளில், அவரது சிந்தனைகளை நடைமுறையில் கொண்டு வருவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

*அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து:

அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சாதியக் கொடுமைகளை, சமுதாய பேதங்களை, பெண் அடிமைத் தனத்தை வேரோடு களைய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.