செங்கல்பட்டு: செங்கல்பட்டு மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்று வருகிறது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு உரையாற்றினார். அப்போது; சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் மானமிகு சுயமரியாதைக் காரன் என்ற உணர்வோடு பங்கெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம்; 92 வயது இளைஞராக ஓய்வின்றி தமிழ் சமுதாயத்துக்கு வழிகாட்டும் ஆசிரியர் கி.வீரமணிக்கு வணக்கம் தெரிவிக்கிறேன்.
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லமாட்டேன்; உங்கள் பணிச்சுமையை குறைத்துக் கொள்ளுங்கள் என்றே கேட்கிறேன். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவது மகிழ்ச்சி. பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேசப்படுகிறது. இது பெரியார் கொள்கைக்கும், திராவிட சிந்தனைக்கும் கிடைத்த வெற்றி; திருச்சியில் உருவாகி வரும் பெரியார் உலகத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். பெரியார் உலகமயமாக வேண்டும்; உலகம் பெரியார்மயமாக வேண்டும்.
பாலின பேதத்தை உடைத்து பெண்களையும் அர்ச்சகராக்கி உள்ளோம். ஆதிக்கத்தின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல்லை அகற்ற வைத்துள்ளோம். சமத்துவ, சமுதாயத்தை உருவாக்கவே திராவிட மாடல் அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கி உள்ள கட்டமைப்புகளை உங்களால் உடைக்க முடியவில்லை. நூறு ஆண்டுகளில் மாற்றத்துக்கான விதைகளை மட்டுமே விதைத்துள்ளோம். எதுவுமே மாறக் கூடாது என சதித்திட்டம் தீட்டுபவர்களின் எண்ணத்தை மக்கள் பார்க்க வேண்டும்.
என்னைப் பற்றி பொய்களை பரப்புகிறார்கள்; ஆனால் நான் எனது செயல்களால் பதிலடி கொடுத்து வருகிறேன். சிலர் திமுகவை பிடிக்காது என்பார்கள்; இடஒதுக்கீடு, சமத்துவம், சமூக நீதி பிடிக்காதது என்பதன் பொருள்தான் அது. பிற்போக்குதனத்தை தூக்கிப் பிடிப்பதற்கான சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பிற்போக்குத்தனத்தை புகுத்த நினைப்பதை தடுக்கும் அரண்தான் திராவிட மாடல். தமிழினம் தன்னை காத்துக் கொள்ளக் கூடிய சமுதாய தேர்தல்தான் 2026 தேர்தல் என்று கூறினார்.