பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்ப்பு எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம்: திருமாவளவன் பேச்சு
தர்மபுரி: பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைத்துள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசினார். தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் திமுக தோழர்களின் வேகத்துக்கு இணையாக, விடுதலை சிறுத்தைகளும் களத்தில் இருப்போம். வெற்றியை குவிப்போம். மீண்டும் தளபதியை தமிழகத்தின் முதலமைச்சராக நாற்காலியில் அமர வைப்போம். இதன் மூலம் தான் பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் கண்ட கனவை நாம் நினைவாக்க முடியும். இல்லையென்றால் பெரிய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
பெரியார் பாசறையில் உருவான இயக்கம் அதிமுக.
இன்றைக்கு பெரியாருக்கு எதிரான, பெரியாரை கொச்சைப்படுத்தும் சக்திகளுடன் இணைந்து, தமிழ் மண்ணில் இருந்து பெரியார் அரசியலை துடைத்தெறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கும் சக்திகளோடு கைகோர்த்து கொண்டிருக்கிறார்கள். அது திராவிட அரசியலுக்கு எதிரானது. அவரின் மானசீக குரு, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கூட செய்கின்ற துரோகம். வலதுசாரி சக்திகளிடம் இருந்தும், பிற்போக்கு சக்திகளிடம் இருந்தும் இந்த மண்ணில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பெரியார், அண்ணா மாடல் அரசு, கலைஞர் அமைத்து நிறுவிய அரசு, மீண்டும் இந்த மண்ணில் தொடர வேண்டும். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி நம்மை வீழ்த்த இங்கு முயற்சி செய்கிறது. சதி முயற்சிகளுக்கு இங்கு இடமில்லை. தேர்தல் களம் நம்மை நோக்கி வருகிறது. அதற்கு தயாராவோம். இவ்வாறு திருமாவளவன் எம்பி பேசினார்.
 
 
 
   