Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பூர் அம்பத்தூர் இடையே ரூ.182.01 கோடி மதிப்பீட்டில் 5வது, 6வது ரயில் பாதைகள்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை 6.4 கிலோமீட்டர் தூரத்தில் மேலும் இரண்டு ரயில் பாதைகளை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.182.01 கோடி செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. நெரிசலைக் குறைத்து, மக்களுக்கு வசதியான பயணத்தை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக பெரம்பூர் பகுதியில் ஒரு அதிநவீன ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது.

இந்த புதிய நிலையம் கட்டி முடிந்தவுடன், தற்போது பெரம்பூர் பகுதியில் இருந்து கிளம்பும் ரயில்களில் 75 சதவீத ரயில்கள் இந்த புதிய நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது பெரம்பூர் பகுதியில் உள்ள நெரிசலை வெகுவாக குறைக்கும். மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் சில ரயில்கள் பெரம்பூரில் இருந்து கிளம்பும். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும்.

இந்த புதிய ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் எளிதாகவும் வேகமாகவும் செல்வதற்கு, பெரம்பூர்-அம்பத்தூர் இடையே கூடுதல் பாதைகள் மிகவும் அவசியம். இதனால்தான் 5வது மற்றும் 6வது பாதைகள் அமைக்கப்படுகின்றன. தற்போது இருக்கும் ரயில் பாதைகளின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இப்போது 105 சதவீதம் வரை பயன்படுத்தப்படும் இந்த பாதைகள், 2028-29ம் ஆண்டில் 114 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசு கணக்கிட்டுள்ளது.

இதன் அர்த்தம் இப்போது இருக்கும் பாதைகள் மக்களின் தேவைக்கு எந்த விதத்திலும் போதாது என்பதுதான். இந்த புதிய பாதைகள் அமைக்கப்பட்டவுடன், பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, வணிக போக்குவரத்தும் பெரிய அளவில் மேம்படும். ஆண்டுக்கு 70 லட்சம் டன் கூடுதல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியும். இது சென்னையின் வணிக வளர்ச்சிக்கு பெரிய உதவியாக இருக்கும்.

அரசின் பொருளாதார நிபுணர்கள் இந்த திட்டத்தை ஆய்வு செய்து பார்த்து. இந்த திட்டம் மிகவும் லாபகரமானது என்று தெரிவித்துள்ளனர். நிதி வருமான அளவு 17.45 சதவீதம் மற்றும் பொருளாதார வருமான அளவு 34.43 சதவீதம் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இது அரசுக்கு நல்ல லாபத்தை கொண்டு வரும். இத்திட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில், எதிர்கால திட்டங்களில் 50 மைல்களுக்கு மேலான பாதைகளில் லூப் லைன்களை பொருத்தமான இடங்களில் அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் பெரம்பூர்-அம்பத்தூர் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு நன்மைகளை கொண்டு வரும். முதலாவதாக, தினசரி பயணம் செய்யும் மக்களுக்கு நெரிசல் குறைந்து வசதியான பயணம் கிடைக்கும்.

இரண்டாவதாக, ரயில் சேவை மேம்பட்டு, நேரத்திற்கு ரயில்கள் வரும். மூன்றாவதாக, பொருள் போக்குவரத்து மேம்பட்டு, வணிக வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டம் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும். பயணிகள் மற்றும் பொருள் போக்குவரத்து இரண்டும் கணிசமாக மேம்படும். இது சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும்.