Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் பகுதி அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

*கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மற்றும் கோனேரிப் பாளையம், எசனை அரசுத் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாணவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்தார்.பெரம்பலூர் நகராட், முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரம்பலூர் ஒன்றியம், கோனேரிப் பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, எசனை அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படும் விதம் குறித்து பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம், சமையலறை, சமைத்த பாத்திரங்களை கழுவும் இடம், உணவுப் பொருட்கள் வைப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார். பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, சமைக்கப்படும் உணவு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

சமையல் கூடம், மாணவர்கள் சாப்பிடும் இடம் ஆகியன சுகாதாரமாகப் பராமரிக்கவும், உணவு தரமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சமையலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு தாமே உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். முத்துநகர், கோனேரி பாளையம், எசனை ஆகிய 3 பள்ளிகளில் உணவை சாப்பிட்டபின், உணவு சுவையாக இருப்பதாக சமையலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், கல்வி மேம்படவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும். அதனால், நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு எப்படி சமைத்துக் கொடுப்போமோ அப்படி சமைத்து அன்புடன் பரிமாறுங்கள் என்று ஆசிரியர்களுக்கும், சத்துணவுப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

முன்னதாக முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள குழந்தை மையத்தைப் பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். அந்த மையத்திற்கு உட்பட்டபகுதியில் எத்தனைக் குழந்தைகள் உள்ளனர், அனைவரும் குழந்தைகள் மையத்திற்கு வருகின்றார்களா, அனை வருக்கும் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா? கர்ப்பினித் தாய் மார்களுக்கு சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, மகளிர் திட்ட இயக்குநர் அமுதா, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சாந்தாதேவி, நகராட்சிப் பொறியாளர் பாண்டியராஜன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், இமயவரம்பன், வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.